இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி, 2020
படைப்பாற்றலை ஊக்குவிப்பதையும் மகிழ்ச்சியைப் பரப்புவதையும் TikTok நோக்கமாகக் கொண்டுள்ளது. பயனர்கள் தங்கள் உண்மையான படைப்பை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டறியவும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுடன் தொடர்பிலிருக்கவும் உதவும் வகையில் ஓர் உலகளாவிய சமூகத்தைக் கட்டமைக்கின்றோம். இந்தச் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் எங்கள் மதிப்புகளைப் பிரதிபலிக்கின்றன மற்றும் எங்கள் தளங்களின் பொதுவான நடத்தை நெறிமுறைகளை வரையறுக்கின்றன. இந்த வழிகாட்டுதல்கள் ஒரு பாதுகாப்பான பகிரப்பட்ட இடத்தைப் பராமரிக்க எங்கள் சமூகத்தை அனுமதிக்கின்றன.
பொறுப்புடன் கூடிய சுதந்திர வெளிப்பாடு என்ற அடித்தளத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட தளத்தை TikTok கொண்டுள்ளது. தனித்துவமாக இருக்கும் ஒரு சமூகத்தைக் கண்டுபிடிக்கும் அதே வேளையில், தனித்துவமானதாக இருப்பதைக் கொண்டாடவும் பயனர்களை ஊக்குவிக்கிறோம். எங்கள் பயனர்கள் பலதரப்பட்ட தேசியங்கள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், மேலும் நாங்கள் செயல்படும் நாடுகளின் கலாச்சார விதிமுறைகளையும் உள்ளூர் விதிமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதே எங்கள் முதல் முன்னுரிமையாகும். வெளிப்படையாகவும் படைப்புத்திறனுடனும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் மக்களுக்குச் சௌகரியமாக இருக்க, பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். போலியான உள்ளடக்கம் மற்றும் கணக்குகளை எங்கள் தளத்திலிருந்து ஒதுக்கி வைப்பதன் மூலம் உண்மையான தொடர்புகளுக்கான சூழலை வளர்ப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
எங்கள் மதிப்புகள், எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் அடித்தளமாக அமைகின்றன. எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோ, ஆடியோ, படம் மற்றும் உரை உள்ளிட்ட உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம், மேலும், கடுமையான அல்லது மீண்டும் மீண்டும் மீறல்களில் ஈடுபடும் கணக்குகளை இடைநிறுத்தம் அல்லது தடை செய்வோம். சில சூழ்நிலைகளில், எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு படி மேலே சென்று கணக்குகளை சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளிடம் புகாரளிப்போம்.
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் மற்றும் TikTok-இல் பகிரப்படும் எல்லாவற்றிற்கும் பொருந்தும். தளத்தில் எது அனுமதிக்கப்படுகிறது, எது அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான பொதுவான வழிகாட்டுதலை அவை வழங்குகின்றன. எங்கள் வழிகாட்டுதல்களின்படி பொதுவாக அகற்றப்படும் சில உள்ளடக்கத்திற்குப் பொதுமக்கள் மதிப்புக் கொடுக்கக்கூடும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். எனவே, கீழேயுள்ள பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, சில சூழ்நிலைகளில், விதிவிலக்குகளையும் நாங்கள் அனுமதிக்கலாம்.
சமூக நடத்தைக்கு இணங்கி நடக்கவும், பெருகிவரும் அபாயங்களைத் தணிக்கவும், படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கு TikTok-ஐப் பாதுகாப்பான இடமாக வைத்திருக்கவும் நாங்கள் அவ்வப்போது எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கின்றோம்.
ஆபத்தான நபர்கள் மற்றும் அமைப்புகள்
பயங்கரவாதம், குற்றம் அல்லது தீங்கு விளைவிக்கும் பிற வகையான நடத்தைகளை ஊக்குவிக்கும் ஆபத்தான நபர்கள் அல்லது அமைப்புகள் எங்கள் தளத்தைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பொதுப் பாதுகாப்புக்கு நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருக்கும்போது, கணக்கைத் தடைசெய்து, தொடர்புடைய சட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தந்து சிக்கலைக் கையாளுகின்றோம்.
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள்
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் என்பவை எந்தவொரு அரசு சாராத அமைப்புகளாகும், அவை அரசியல், மதம், இனத்தை மற்றும் கருத்தைத் திணிப்பதற்காக மக்கள், அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துவதற்கும், அமைதியான மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்காக முன்திட்டமிட்ட வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துகின்றன.
பிற ஆபத்தான நபர்கள் மற்றும் நிறுவனங்கள்
குற்றங்களைச் செய்பவர்கள் அல்லது பிற வகையான கடுமையான தீங்குகளை ஏற்படுத்துபவர்களை ஆபத்தான நபர்கள் மற்றும் அமைப்புகளாக வரையறுக்கின்றோம். இந்த வகையான குழுக்கள் மற்றும் குற்றங்களில் பின்வருபவை உள்ளிட்ட பலவும் அடங்கும்:
- வெறுக்கத்தக்கக் குழுக்கள்
- வன்முறைத் தீவிரவாத அமைப்புகள்
- கொலை
- மனிதக் கடத்தல்
- மனித உறுப்புக் கடத்தல்
- ஆயுதக் கடத்தல்
- போதைப்பொருள் கடத்தல்
- ஆள்கடத்தல்
- பணம் பறித்தல்
- மிரட்டுதல்
- பணமோசடி
- மோசடி
- இணையக் குற்றம்
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- ஆபத்தான நபர்கள் மற்றும்/அல்லது அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெயர்கள், சின்னங்கள், லோகோக்கள், கொடிகள், கோஷங்கள், சீருடைகள், சைகைகள், உருவப்படங்கள் அல்லது பிற பொருட்கள்
- ஆபத்தான நபர்கள் மற்றும்/அல்லது அமைப்புகளைப் புகழும், மகிமைப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம்
- விதிவிலக்குகள்: ஆபத்தான நபர்கள் மற்றும்/அல்லது அமைப்புகளுக்கு எதிரான கல்வி, வரலாற்று, நையாண்டி, கலை மற்றும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய பகடி செய்யும் பிற உள்ளடக்கம் அல்லது அவர்களால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளவை
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்
சில ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்களின் வர்த்தகம், விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுடன், குற்றச் செயல்களின் சித்தரிப்பு அல்லது ஊக்குவிப்பையும் நாங்கள் தடைசெய்கிறோம். சில உள்ளடக்கம் பெரும்பாலான பிராந்தியம் அல்லது உலகில் சட்டவிரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகள் அல்லது பொருட்களுடன் தொடர்புடையதாக இருந்தால், கேள்விக்குரிய செயல்பாடுகள் அல்லது பொருட்களைப் பதிவிடும் அதிகார வரம்பில் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட அவை அகற்றப்படலாம். கல்வி, அறிவியல், கலை மற்றும் செய்திக்குரிய உள்ளடக்கம் போன்ற பொதுமக்களுக்கு மதிப்பை வழங்கும் உள்ளடக்கத்திற்கான விதிவிலக்குகளை நாங்கள் அனுமதிக்கிறோம்.
குற்றச் செயல்களை ஊக்குவித்தல்
திருட்டு, தாக்குதல், மனித அடிமைத்தனம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நடத்தை உள்ளிட்ட சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய பலவிதமான செயல்களும் குற்றச் செயல்களில் அடங்கியுள்ளன. குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் நடத்தை இயல்பாக்கப்படுவதையோ அல்லது பின்பற்றப்படுவதையோ நாங்கள் விரும்பாததால், அத்தகைய உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- தாக்குதல் அல்லது கடத்தல் போன்ற உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் செயல்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- ஸ்வாட்டிங் போன்ற ஃபிராங்க் நிகழ்ச்சிகள் உட்பட மற்றவர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் உள்ளடக்கம்
- மனித அடிமைத்தனம் அல்லது வனவிலங்குக் கடத்தலை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- சட்டவிரோதமாக வாங்கிய பொருட்களின் கொள்முதல், விற்பனை அல்லது வர்த்தகத்தை வழங்கும் உள்ளடக்கம்
- குற்றச் செயல்களை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
ஆயுதங்களின் விற்பனை அல்லது பயன்பாடு
எங்கள் சமூகத்தைப் பாதுகாக்க, துப்பாக்கிகள், வெடிமருந்துகள், துப்பாக்கிப் பாகங்கள் அல்லது வெடிக்கும் ஆயுதங்களைச் சித்தரிக்கவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது விளம்பரப்படுத்தவோ நாங்கள் பொதுவாக அனுமதிக்க மாட்டோம். அந்த ஆயுதங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தடைசெய்கின்றோம். பின்வரும் காட்சிகளில் துப்பாக்கிகள் அல்லது பிற வகையான ஆயுதங்களைக் காண்பிக்கும் உள்ளடக்கத்திற்கு நாங்கள் விதிவிலக்குகளை வழங்கலாம்: ஒரு கற்பனையான அமைப்பில், ஒரு அருங்காட்சியகச் சேகரிப்பின் ஒரு பகுதியாக, ஒரு காவல்துறை அதிகாரி, ஓர் இராணுவ அணிவகுப்பில் அல்லது துப்பாக்கி சுடும் தளம் போன்ற பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயன்படுத்தப்படுவது.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- துப்பாக்கிகள், துப்பாக்கி பாகங்கள், வெடிமருந்துகள் அல்லது வெடிக்கும் ஆயுதங்களைக் காண்பிக்கும் உள்ளடக்கம்
- துப்பாக்கிகள், அதன் பாகங்கள், வெடிமருந்துகள், வெடிக்கும் ஆயுதங்கள் அல்லது அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான வழிமுறைகளை வழங்கும், விற்கும், வர்த்தகம் செய்யும் அல்லது கோரும் உள்ளடக்கம்
போதைப்பொருட்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள்
எங்கள் சமூகத்தைப் பாதுகாக்க, மருந்துகள் அல்லது பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பயன்பாடு அல்லது வர்த்தகத்தைச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- போதைப்பொருட்கள், போதைப்பொருள் நுகர்வு அல்லது போதைப்பொருட்கள் அல்லது பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்க, பயன்படுத்த அல்லது வர்த்தகம் செய்ய மற்றவர்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- போதைப்பொருட்கள் அல்லது பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும், வழங்கும், வர்த்தகம் செய்யும் அல்லது கோரும் உள்ளடக்கம்
- சட்டவிரோத அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவது என்பது குறித்த தகவல்களை வழங்கும் உள்ளடக்கம்
மோசடிகள் மற்றும் ஸ்கேம்கள்
தனிநபர்களை ஏமாற்றி மோசடி செய்வதற்கான அல்லது சொத்துகளைத் திருடும் திட்டங்களை உள்ளடக்கி மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். சட்டவிரோத நிதிப் பலனைப் பெறுவதற்காக மக்களை வேண்டுமென்றே ஏமாற்றும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- ஃபிஷிங்கை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- போன்ஸி அல்லது பிரமிடு திட்டங்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- ஃபிக்ஸ் செய்த பெட்டிங், விரைவாகப் பணக்காரராகும் திட்டங்கள் அல்லது வேறு எந்த வகையான ஸ்கேம்களையும் ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
வன்முறை மற்றும் கிராஃபிக் உள்ளடக்கம்
குறிப்பாக மோசமான வன்முறை அல்லது துன்பங்களை ஊக்குவிக்கும் அல்லது மகிமைப்படுத்தும் அதிகப்படியான கொடூரமான அல்லது அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். சில சூழ்நிலைகளுக்கு விதிவிலக்குகளை நாங்கள் அனுமதிக்கிறோம், எடுத்துக்காட்டாக, செய்திக்குத் தகுதியான அல்லது பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உள்ளடக்கம். வன்முறை அல்லது பொதுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் போன்ற உண்மையான ஆபத்தை நாங்கள் அடையாளம் காணும்போது, கணக்கைத் தடைசெய்து, தேவையான மற்றும் பொருத்தமான நேரத்தில் தொடர்புடைய சட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றோம்.
வன்முறை மற்றும் கிராஃபிக் உள்ளடக்கம்: மனிதர் சார்ந்தவை
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- அதிர்ச்சியூட்டும், சோகமான அல்லது அதிகப்படியான கிராஃபிக் கொண்ட உள்ளடக்கம், இதில் பின்வருபவை உட்பட பலவும் அடங்கும்:
- உண்மையான நபர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை அல்லது தற்செயலான மரணங்களின் சித்தரிப்புகள்
- சிதைக்கப்பட்ட, சிதைந்த, எரிந்த அல்லது எரிக்கப்பட்ட மனித எச்சங்களின் சித்தரிப்புகள்
- திறந்த காயம் அல்லது முக்கிய காட்சியாகக் காயம் இருக்கும் கோரமான சித்தரிப்புகள்
- உடல்சார்ந்த கடுமையான வன்முறையின் சித்தரிப்புகள்.
- விதிவிலக்குகள்: அரங்கேற்றப்படும் அல்லது தொழில்முறைச் சண்டை, பாரம்பரியத் தற்காப்புக் கலைகள் அல்லது ஒரு கற்பனையான அமைப்பில் சண்டையிடுதல்
வன்முறை மற்றும் கிராஃபிக் உள்ளடக்கம்: விலங்குகள் சார்ந்தவை
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- அதிர்ச்சியூட்டும், சோகமான அல்லது அதிகப்படியான கிராஃபிக் கொண்ட உள்ளடக்கம், இதில் பின்வருபவை உட்பட பலவும் அடங்கும்:
- உண்மையான விலங்குகளின் படுகொலையைப் பற்றிய சித்தரிப்புகள்
- சிதைக்கப்பட்ட, சிதைந்த, எரிந்த அல்லது எரிக்கப்பட்ட விலங்கு எச்சங்களின் சித்தரிப்புகள்
- விலங்குகளைக் கொடுமைப்படுத்தும் சித்தரிப்புகள்
தற்கொலை, சுய தீங்கு மற்றும் ஆபத்தான செயல்கள்
தீங்கு விளைவிக்கும் செயல்களில் பங்கேற்பதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. ஆபத்தான செயல்களில் பங்கேற்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் பயனர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சுய-தீங்கு அல்லது தற்கொலையைத் தூண்டும் உள்ளடக்கத்தை அனுமதிக்க மாட்டோம். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக தமது அனுபவங்களைப் பகிர எங்கள் பயனர்களை அனுமதிப்போம்.
சுய-தீங்கு அல்லது தற்கொலை எண்ணங்களுடன் போராடும் பயனர்களை அல்லது தற்கொலை செய்வதைத் தீவிரமாகக் கருதும் நபரை அறிந்த பயனர்கள் உடனடியாகச் சட்ட அதிகாரிகளையோ அல்லது தற்கொலைத் தடுப்பு ஹாட்லைனையோ தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
தற்கொலை
தற்கொலையைக் காண்பிக்கும் உள்ளடக்கம், தற்கொலை எண்ணங்கள் அல்லது ஒத்த செயல்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் ஆகியவற்றை நாங்கள் அகற்றுவோம். தற்கொலை முயற்சி அல்லது சுய-மரணத்திற்கு வழிவகுக்கும் செயல்களைச் செய்யும் அல்லது செய்ய விரும்பும் நபர் இடம்பெறும் உள்ளடக்கமும் இதில் அடங்கும். தற்கொலையைப் புகழும், மகிமைப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அல்லது தற்கொலை செய்வது எப்படி என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாங்கள் தடைசெய்கின்றோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
தற்கொலை செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
- தற்கொலையைப் புகழும், ஊக்குவிக்கும் அல்லது மகிமைப்படுத்தும் உள்ளடக்கம்
- தற்கொலைச் சவால்கள்
- விதிவிலக்குகள்: தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அதைச் சமாளிக்கும் ஆதரவு, ஆதாரங்கள் அல்லது வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
சுய-தீங்கு
சுய-தீங்கு விளைவிக்கும் நடத்தையை இயல்பாக்குவது, ஊக்குவிப்பது அல்லது தூண்டுவதைத் தவிர்ப்பதற்கு, பயனரின் பதிவிடும் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், அத்தகைய நடத்தைகளைச் சித்தரிக்கும் படங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உடல் ரீதியான காயத்திற்கு வழிவகுக்கும் செயல்களை ஊக்குவிக்கும் அல்லது ஊக்குவிக்கக்கூடிய உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம். உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கமும் தளத்தில் அனுமதிக்கப்படாது.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
சுய காயங்களைக் காட்டும் உள்ளடக்கம்
- சுயமாகக் காயம் ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
- புரோ-அனா அல்லது எடை குறைப்புக்கான பிற ஆபத்தான நடத்தைகளை ஆதரிக்கும் உள்ளடக்கம்
- விதிவிலக்குகள்: உண்ணுதல் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லது சுய-தீங்கில் பங்கேற்பவர்களுக்கு சமாளிக்கும் ஆதரவு, வளங்கள் அல்லது வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
ஆபத்தான செயல்கள்
தொழில்முறையற்ற சூழலில் அல்லது தேவையான திறன்கள் இல்லாமல் நடத்தப்படும் ஆபத்தான செயல்கள் அல்லது பிற ஆபத்தான நடத்தை, பயனருக்கு அல்லது பொதுமக்களுக்கு கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்பட வழிவகுக்கும். அமெச்சூர் ஸ்டண்ட் அல்லது ஆபத்தான சவால்கள் உள்ளிட்ட இத்தகைய நடத்தைகளை ஊக்குவிக்கும், விளம்பரப்படுத்தும் அல்லது மகிமைப்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- ஆபத்தான கருவிகளின் பொருத்தமற்ற பயன்பாட்டைக் காட்டும் உள்ளடக்கம்
- சாப்பிடக்கூடாத பொருட்களை சாப்பிடுதல் அல்லது குடித்தல் ஆகியவற்றை சித்தரிக்கும் உள்ளடக்கம்
- காயத்திற்கு வழிவகுக்கும் ஆபத்தான சவால்கள்
- சட்டப்பூர்வமான வயதையடையாத சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவதைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
வெறுப்பூட்டும் பேச்சு
பாதுகாக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழுவுக்கு எதிரான தாக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். வெறுப்பூட்டும் பேச்சிலான உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அதை எங்கள் தளத்திலிருந்து அகற்றுவோம். பல வெறுக்கத்தக்க பேச்சு மீறல்களைக் கொண்ட கணக்குகளையும் இடைநிறுத்துவோம் அல்லது தடை செய்வோம்.
பாதுகாக்கப்பட்ட குழுக்கள் மீதான தாக்குதல்கள்
பாதுகாக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு தனிநபரையோ அல்லது தனிநபர்களின் குழுவையோ தாக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும், வன்முறையைத் தூண்டுவதற்கும் அல்லது மனிதநேயமற்ற முறையில் நடத்துவதற்கும் அல்லது அந்த நோக்கம் கொண்ட உள்ளடக்கமாக வெறுக்கத்தக்க பேச்சை வரையறுக்கின்றோம். பின்வரும் பாதுகாக்கப்பட்ட பண்புகளில் ஏதேனும் ஒரு நபருக்கு அல்லது குழுவிற்கு வாய்வழி அல்லது உடல் ரீதியாக வன்முறையைத் தூண்டும் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்:
- இனம்
- இனக்குழு
- தேசியம்
- மதம்
- சாதி
- பாலியல் நாட்டம்
- பாலியல்
- பாலினம்
- பாலின அடையாளம்
- கடுமையான நோய் அல்லது ஊனம்
- குடிவரவு நிலை
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- மேலே பட்டியலிடப்பட்ட பண்புகளின் அடிப்படையில், தனிநபர்கள் அல்லது குழுக்களை மனிதநேயமற்ற முறையில் நடத்தும் அல்லது அவர்களுக்கு எதிரான வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கம், இதில் பின்வருபவை உள்ளிட்ட பலவும் அடங்கும்:
- அவர்கள் உடல் ரீதியாக அல்லது ஒழுக்க ரீதியாகத் தாழ்ந்தவர்கள் என்று கூறுவது
- அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுப்பது அல்லது நியாயப்படுத்துவது
- அவர்களைக் குற்றவாளிகள் என்று கூறுவது
- விலங்குகள், உயிரற்ற பொருட்கள் அல்லது மனிதரல்லாத பிற ஜந்துக்கள் என
- எதிர்மறையாகக் குறிப்பிடுவது
- விலக்குதல், பிரித்தல் அல்லது அவர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றை
- ஊக்குவிப்பது அல்லது நியாயப்படுத்துவது
இழி சொற்கள்
இழி சொற்கள் என்பவை ஓர் இனக்குழு, இனம் அல்லது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வேறு எந்தப் பாதுகாக்கப்பட்ட பண்புகளையும் இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படும் இழிவான சொற்களாக வரையறுக்கப்படுகின்றன. மிக மோசமான தாக்குதல் சொற்களைப் பரப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்பவில்லை என்பதால் எங்கள் தளத்தில் அவை பொறுத்துக் கொள்ளப்படுவதில்லை. இருப்பினும், இழி சொற்கள் சுய-குறிப்புடன் அல்லது வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற உண்மையை அறிவோம், மேலும் ஒரு பாடலில் அல்லது சுய-குறிப்பு கொண்ட நையாண்டிச் சூழல் மற்றும்/அல்லது வேறு அர்த்தம் கொண்ட பிற நிகழ்வுகளில் இழி சொற்கள் பயன்படுத்தப்படும்போது விதிவிலக்குகளை வழங்கலாம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- ஒப்புதல் இல்லாத இழி சொற்களைத் தூண்டும் உள்ளடக்கம்
வெறுக்கத்தக்க சித்தாந்தம்
வெறுக்கத்தக்க சித்தாந்தங்கள் எங்கள் தளம் வழங்கும் உள்ளடக்கிய மற்றும் ஆதரவான சமூகத்திற்குப் பொருந்தாது. வெறுக்கத்தக்க சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
வெறுக்கத்தக்க சித்தாந்தங்களைப் பற்றி சாதகமாகக் கூறும் அல்லது காட்டும் லோகோக்கள், சின்னங்கள், கொடிகள், கோஷங்கள், சீருடைகள், வணக்கங்கள், சைகைகள், உருவப்படங்கள், எடுத்துக்காட்டுகள் அல்லது இந்த சித்தாந்தங்களுடன் தொடர்புடைய தனிநபர்களின் பெயர்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் வன்முறை நிகழ்வுகளை மறுக்கும் உள்ளடக்கம்
- வெறுக்கத்தக்க சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் இசை அல்லது பாடல்
துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தல்
பயனர்கள் வெட்குதல், அவமானம், கொடுமை அல்லது துன்புறுத்தப்படுவார்கள் என்ற அச்சமின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பாதுகாப்பாக உணர வேண்டும். தவறான உள்ளடக்கத்தால் தனிநபர்களுக்கு ஏற்படக்கூடிய உளவியல் துயரத்தை ஆழமாகப் புரிந்துகொள்கின்றோம், எங்கள் தளத்தில் தவறான உள்ளடக்கம் அல்லது நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
தவறான நடத்தை
வன்முறை அச்சுறுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல், தோற்றம், புத்தி, ஆளுமைப் பண்புகள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான நிந்தனை வாக்கியங்கள் உட்பட ஆனால் அவை மட்டுமின்றி
அனைத்து வகை நிந்தனை வெளிப்பாடுகளையும் நாங்கள் அகற்றுகிறோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- வன்முறையால் ஒரு நபரை அச்சுறுத்தும் உள்ளடக்கம்
- ஒரு நபருக்கு மரணம், கடுமையான நோய், உடல் ரீதியிலான அல்லது பிற தீங்குகளை விரும்பும் உள்ளடக்கம்
- வன்முறை அல்லது ஒருங்கிணைந்த துன்புறுத்தலைத் தூண்டும் உள்ளடக்கம்
- ஒரு பயனரின் பாலியல் செயல்பாடுகளை இழிவுபடுத்துவதன் மூலமோ அல்லது தேவையற்ற பாலியல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலமோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கம்
- புத்தி, தோற்றம், ஆளுமைப் பண்புகள் அல்லது தனிப்பட்ட சுகாதாரம் போன்ற பண்புகளின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தும் உள்ளடக்கம்
- வன்முறை துயரங்களைப் புகழும், பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் உள்ளடக்கம்
- பிற பயனர்களைக் குறிவைத்து தவறான உள்ளடக்கத்தை உருவாக்க TikTok டூயட், ரியாக்ட் அல்லது விளைவு அம்சங்களைப் பயன்படுத்தும் உள்ளடக்கம்
மற்றவர்களின் தனியுரிமையை மீறுதல்
தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வெளிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்துவதாக அச்சுறுத்துவது கடுமையான உணர்ச்சிகரமான மன உளைச்சலை ஏற்படுத்தி நிஜ வாழ்க்கையில் தீங்குக்கு வழிவகுக்கும். நாங்கள் அதை நிந்தனையின் ஒரு வடிவமாகக் கருதுகிறோம், அதை TikTok-இல் அனுமதிக்க வேண்டாம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- குடியிருப்பு முகவரி, தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி, தனிப்பட்ட ஃபோன் எண், வங்கி அறிக்கை, சமூகப் பாதுகாப்பு எண் அல்லது பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட ஆனால் அவை மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வெளிப்படுத்தும் அல்லது வெளிப்படுத்துவதாக அச்சுறுத்தும் உள்ளடக்கம்
- பாலியல் படங்கள் அல்லது ஒப்புதல் இல்லாத நெருக்கமான படங்களை வெளிப்படுத்துவதாகக் கூறும் அச்சுறுத்தல்கள்
பெரியோரின் நிர்வாணம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள்
பாலியல் வெளிப்படையான அல்லது பாலியல் ரீதியில் இன்பமளிக்கும் உள்ளடக்கம் மற்றும் இந்த வகையான அனிமேஷன் உள்ளடக்கத்தை நாங்கள் TikTok-இல் அனுமதிக்க மாட்டோம். பாலியல் ரீதியான உள்ளடக்கம் சில அதிகார வரம்புகளில் சட்ட அபராதங்களைத் தூண்டுவது போன்ற பல அபாயங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒப்புதல் இல்லாத நெருக்கமான படங்களைப் (எடுத்துக்காட்டாக, பழிவாங்கும் ஆபாசப் படம்) பகிர்வது எங்கள் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். மேலும், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் சில கலாச்சாரங்களுக்குள் புண்படுத்தும் உள்ளடக்கமாகும். கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை நோக்கங்களுக்காக நிர்வாணம் மற்றும் பாலியல் வெளிப்படையான உள்ளடக்கத்தைச் சுற்றியுள்ள சில விதிவிலக்குகளை நாங்கள் அனுமதிக்கின்றோம். எடுத்துக்காட்டாக, முலையழற்சி வடுக்கள் பற்றி விவாதிக்கும் அல்லது காண்பிக்கும் உள்ளடக்கம் அனுமதிக்கப்படுகிறது.
பாலியல் சுரண்டல்
பாலியல் சுரண்டல் என்பது பாலியல் நோக்கங்களுக்காகப் பலவீனம், அதிகாரம் அல்லது நம்பிக்கையின் நிலையில் உண்மையான அல்லது முயற்சித்த துஷ்பிரயோகம் ஆகும், இதில் பணம், சமூகம் அல்லது அரசியல் ரீதியாக மற்றொருவரின் பாலியல் சுரண்டலிலிருந்து லாபம் ஈட்டுவதும் அடங்கும்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- ஒப்புதல் இல்லாத பாலியல் செயல்களைச் சித்தரிக்கும், செய்யும் அல்லது தூண்டும் உள்ளடக்கம்
- பாலியல் வேண்டுகோள் அல்லது பாலியல் குறிக்கோளைச் செய்யும், ஊக்குவிக்கும் அல்லது மகிமைப்படுத்தும் உள்ளடக்கம்
பெரியவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் நிர்வாணம்
பாலியல் திருப்திநிலை நோக்கத்திற்காகப் பாலியல் உறுப்புகள் மற்றும்/அல்லது செயல்பாடுகளை வெளிப்படையாகச் சித்தரிக்கும் ஆபாசப்படம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- புணர்ச்சி, புணர்ச்சி அல்லாத செக்ஸ் அல்லது வாய்வழி செக்ஸ் போன்ற பாலியல் செயல்பாடுகளைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- மனித பிறப்புறுப்புகள், பெண் முலைக்காம்புகள் அல்லது பிட்டம் ஆகியவற்றைக் காட்டும் உள்ளடக்கம்
- பாலியல் தூண்டுதலைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- பாலியல் ஆதிக்கத்தைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
மைனர்கள் பாதுகாப்பு
குழந்தைகளின் பாதுகாப்பிற்குக் கடும் உறுதிபூண்டுள்ளோம், மேலும் மைனர்களுக்கு எதிரான சுரண்டும் அல்லது உணர்ச்சிப்பூர்வமாக மயக்கும் நடத்தையை நாங்கள் கிஞ்சிற்றும் சகித்துக்கொள்வதில்லை. சிறுவர்களிடம் தவறான நடத்தை, குழந்தை நிர்வாணம் அல்லது பாலியல் சுரண்டல் ஆகியவற்றை டிஜிட்டல் மற்றும் நிஜ உலக வடிவத்தில் சித்தரிக்கும் அல்லது பரப்பும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மேலும் இதுபோன்ற உள்ளடக்கத்தை சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கின்றோம். சிறார்களை குற்ற நடத்தைகளில் சித்தரிக்கும் உள்ளடக்கத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
TikTok-ஐப் பயன்படுத்த பயனர்கள் குறைந்தபட்ச வயதுத் தேவைகளைப் (எங்கள் சேவை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பூர்த்தி செய்ய வேண்டும். வயது குறைந்தவர்கள் கணக்கு வைத்திருந்து அடையாளம் காணப்படும்போது, நாங்கள் அவர்களின் கணக்குகளை எங்கள் தளத்திலிருந்து அகற்றுவோம், மேலும் அவர்களின் பிராந்தியத்தில் மிகவும் பொருத்தமான பயன்பாட்டு அனுபவம் இருந்தால் அதற்கு அவர்களை நாங்கள் அனுப்பக்கூடும்.
மைனர்கள் ஈடுபடும் நிர்வாணம் மற்றும் பாலியல் சுரண்டல்
நிர்வாணத்தில் அந்தரங்கப் பாகங்களைக் காட்டும் உள்ளடக்கமும் அடங்கும். பாலியல் சுரண்டல் என்பது பாலியல் நோக்கங்களுக்காகப் பலவீனப்படுத்தல், வலிமையைப் பிரயோகித்தல் அல்லது பொய்யான நம்பிக்கையளித்தல் ஆகியவனவாகும், இதில் பணம், சமூகம் அல்லது அரசியல் ரீதியாக மற்றொருவரின் பாலியல் சுரண்டலிலிருந்து லாபம் ஈட்டுவதும் அடங்கும்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- மைனர்களின் அந்தரங்கப் பாகங்களைக் காட்டும் உள்ளடக்கம்
- சிறார்களின் பாலியல் சுரண்டலைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- மைனர்கள் ஈடுபடும் புணர்ச்சி, புணர்ச்சி அல்லாத செக்ஸ் அல்லது வாய்வழி செக்ஸ் போன்ற பாலியல் செயல்பாடுகளைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- மைனர்கள் ஈடுபடும் பாலியல் தூண்டுதலைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- மைனர்கள் ஈடுபடும் பாலியல் ஆதிக்கத்தைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
சிறார் குற்றவியல் நடத்தை
குற்ற நடத்தையில் வரம்பில்லாமல் போதைப் பொருட்கள், மது மற்றும் புகையிலை ஆகியவற்றின் நுகர்வு அல்லது பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- மைனர்கள் மதுபானம், போதைப் பொருட்கள் அல்லது புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, வைத்திருப்பது அல்லது = உட்கொண்டிருப்பார்களோ என சந்தேகிப்பதைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்.
சிறார் துஷ்பிரயோகம்
சிறாரிடம் தவறான நடத்தை என்பது மைனருக்கு உடல் மற்றும்/அல்லது உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அதிகாரத்தில் உள்ள ஒரு நபரால் செய்யப்படுவது என்று வரையறுக்கப்படுகிறது. உடல் ரீதியான தவறான நடத்தை என்பது ஒரு குழந்தையின் உடலில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தும் செயலாகும். உளவியல் ரீதியான தவறான நடத்தை என்பது ஒரு குழந்தையை உடல் அல்லது பாலியல் வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது கொடுமைப்படுத்தல் தந்திரங்கள் மூலம் துன்புறுத்துவதாகும்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- மைனர்களை உள்ளடக்கிய உடல் அல்லது உளவியல் தவறான நடத்தையைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
உணர்ச்சிப்பூர்வமாக மயக்கும் நடத்தை
உணர்ச்சிப்பூர்வமாக மயக்கும் நடத்தை என்பது பாலியல் ரீதியிலான தவறான நடத்தை, பாலியல் சுரண்டல் அல்லது பாலியல் கடத்தல் ஆகியவற்றின் நோக்கங்களுக்காக மைனரிடம் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஓர் உணர்ச்சிப்பூர்வமான உறவை உருவாக்குவதாகும்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- உணர்ச்சிப்பூர்வமாக மயக்கும் நடத்தையை ஊக்குவிக்கும், அறிவுறுத்தும் அல்லது நியாயப்படுத்தும் உள்ளடக்கம்
- பாலியல் ரீதியான உரையாடலில் மைனரை ஈடுபடுத்தும் உள்ளடக்கம்
- பாலியல் ரீதியான வெளிப்படையான விஷயங்களைப் பரப்ப ஒரு குழந்தையை ஊக்குவிக்கும் அல்லது அச்சுறுத்தும் உள்ளடக்கம்
மைனர்களிடையே பாலியல் செய்கைகளைப் பரப்புதல்
மைனர்களுக்குப் பாலியல் செய்கையைக் கற்றுக்கொடுக்கும் அல்லது திணிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
மைனர்கள் ஈடுபடும் சிற்றின்ப நடனங்களைச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
- மைனர்களை உள்ளடக்கிய பாலியல் அல்லது சிற்றின்ப மொழியைக் கொண்ட உள்ளடக்கம்
நேர்மை மற்றும் நம்பகத்தன்மை
எங்கள் சமூக உறுப்பினர்களில் எவரையும் ஏமாற்றும் அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கம் எங்கள் நம்பிக்கை அடிப்படையிலான சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அத்தகைய உள்ளடக்கத்தை எங்கள் தளத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதில் ஸ்பேமிங், ஆள்மாறாட்டம் மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்கள் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.
ஸ்பேம்
தளத்தில் பிரபலத்தன்மையைச் செயற்கையாக உயர்த்த முயலும் உள்ளடக்கம் அல்லது செயல்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. ஊடாடுதல் அளவீடுகளை அதிகரிக்க தளத்தின் வழிமுறைகளை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் தடைசெய்கின்றோம்.
செய்யக்கூடாதவை:
பார்வைகள், விருப்பங்கள், பின்தொடர்பவர்கள், பகிர்வுகள் அல்லது கருத்துகளை எவ்வாறு செயற்கையாக அதிகரிப்பது என்பதற்கான வழிமுறைகளைப் பகிர்தல்
- பார்வைகள், விருப்பங்கள், பின்தொடர்பவர்கள், பகிர்வுகள் அல்லது கருத்துகளை விற்க அல்லது வாங்க முயற்சித்தல்
- செயற்கையான தளப் போக்குவரத்தை உருவாக்கும் சேவைகளை ஊக்குவித்தல்
- நம்பகத்தன்மையற்ற செயல்பாட்டை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள், வணிக ஸ்பேமை விநியோகித்தல் அல்லது TikTok கொள்கைகளின் அளவிடப்பட்ட மீறலை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்காகத் தவறான அல்லது மோசடியான மாறாட்டம் கொண்ட பல TikTok கணக்குகளை இயக்குதல்
ஆள்மாறாட்டம்
பொதுமக்களை ஏமாற்றுவதற்காகப் பயனர்கள் பிற நபர்கள் அல்லது அமைப்புகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆள்மாறாட்டம் குறித்த புகார்களை நாங்கள் உறுதிப்படுத்தும்போது, மீறும் கணக்குகளை அகற்றுவோம். கணக்கின் அடையாளம் அல்லது TikTok-இல் அதன் நோக்கம் குறித்து மற்றவர்களைத் தவறாக வழிநடத்தாதவரை, பகடி, வர்ணனை அல்லது ரசிகர் கணக்குகளுக்கான விதிவிலக்குகளை நாங்கள் அனுமதிக்கின்றோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- வேறொருவரின் பெயர், சுயசரிதை விவரங்கள் அல்லது சுயவிவரப் படத்தை மற்றொரு நபர் அல்லது அமைப்பு தவறாக வழிநடத்துதல்
தவறாக வழிநடத்தும் தகவல்கள்
எங்கள் சமூகத்துக்கோ அல்லது பெரியளவில் பொதுமக்களுக்கோ தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் பயனர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி மரியாதைக்குரிய உரையாடல்களை நடத்த நாங்கள் ஊக்குவிக்கும் அதே வேளையில், தனிநபரின் உடல்நலத்திற்கு அல்லது பெரியளவில் பொதுப் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அகற்றுவோம். தவறான பிரச்சாரங்களால் பரப்பப்பட்ட உள்ளடக்கத்தையும் நாங்கள் அகற்றுவோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- தவறான தகவல்கள் என்பவை பயம், வெறுப்பு அல்லது பாரபட்சத்தைத் தூண்டுபவையாகும்
- மருத்துவச் சிகிச்சைகளைப் பற்றிய தவறான தகவல்கள் போன்ற ஒரு நபரின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்கள்
- புரளி, ஃபிஷிங் முயற்சிகள் அல்லது உருவகப்படுத்தப்பட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்
- தேர்தல்கள் அல்லது பிற குடிமையியல் செயல்முறைகளைக் குறித்து சமூக உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்
அறிவுசார் சொத்து
அசல் உள்ளடக்கத்தை உருவாக்கி, பகிருமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறோம். வேறொருவரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் உள்ளடக்கத்தை வெளியிடவோ விநியோகிக்கவோ பயனர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவற்றைப் பதிவிடக்கூடாது:
- வேறொருவரின் பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் அல்லது எதிராகும் உள்ளடக்கம்
தளப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மேலே குறிப்பிட்டுள்ள உள்ளடக்கம் மற்றும் நடத்தையுடன் கூடுதலாக, எங்கள் கொள்கைகள் TikTok சேவையைபலவீனப்படுத்தும் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன:
- TikTok வலைத்தளம், செயலி அல்லது தொடர்புடைய நெட்வொர்க்குகளை ஹேக் செய்யக்கூடாது அல்லது பயனர்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் அதன் நடவடிக்கைகளை மீறக்கூடாது
- வைரஸ்கள், ட்ரோஜன் ஹார்ஸ், இணைய புழுக்கள், லாஜிக் குண்டுகள் அல்லது தீங்கிழைக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் பிற பொருட்களைக் கொண்ட கோப்புகளை விநியோகிக்கக்கூடாது
- எந்தவொரு கோப்புகள், அட்டவணைகள் அல்லது ஆவணங்கள் உட்பட எதையும் மாற்றியமைக்கவோ, தகவமைக்கவோ, மொழிபெயர்க்கவோ, தலைகீழாக மாற்றவோ அல்லது TikTok-ஐ அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு வழித்தோன்றல் தயாரிப்புகளையும் உருவாக்கவோ கூடாது, அல்லது TikTok-இல் உட்பொதிந்துள்ள எந்த மூலக் குறியீடு, நெறிமுறைகள், முறைகள் அல்லது நுட்பங்களை மீண்டும் உருவாக்க முயலக்கூடாது
- TikTok இலிருந்து தகவல்களைச் சேகரிக்க தானியங்கு ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தக்கூடாது
எங்கள் துடிப்புமிக்க உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான இடத்தைப் பராமரிக்க எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நன்றி. எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக நீங்கள் நம்பும் உள்ளடக்கம் அல்லது கணக்குகளைக் கண்டால், நாங்கள் மதிப்பாய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க இயலும் வகையில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.